கட்டிடக்கலை வல்லுநர் (Architect) என்பவர் யார்?
கட்டிடக்கலை வல்லுநர் என்பவர் யார்? ஒரு
கட்டிடத்தை வடிவமைக்க தேர்ச்சி பெற்றவரே கட்டிடக்கலை வல்லுநர் எனப்படுகிறார். இவர்
இதற்கான படிப்பை படித்து, பட்டம் பெற்று, அனுபவ ரீதியாக தேர்ச்சி பெற்றவராக
இருக்கிறார். இவர் தன் படிப்பில், வடிவமைப்புகளின் அடிப்படைகள், கட்டிடக்கலையின் விதிகள்,
வரைபடம் தயாரித்தல், நிலஅளவை, கட்டுமான பொருட்களின் தன்மைகள், கட்டிடக்கலையின்
வரலாறு, வடிவமைப்புகளின் கோட்பாடு, உட்புற வடிவமைப்பு, கட்டிட அளவெடுப்பு, சுற்று சூழல்,
உளவியல், காலநிலை, நிலைத்தன்மை, பசுமை கட்டிடங்கள், மாசுபடுதல், தோட்டக்கலை, கட்டுமான
தொழில் நுட்பங்கள், தொழில் நடைமுறைகள், போன்றவற்றையும், கட்டிட கட்டமைப்பு, திட்ட மேலாண்மை,
சுகாதாரம், நீர் மற்றும் வடிகால், மின்சாரம், குளிரூட்டுதல், இயந்திரவியல்,
தானியங்கிகள், ஒலிவியல், போன்ற பொறியியல்களின்
அடிப்படைகளையும் பாடங்களாக பெற்று
தேர்ச்சி பெறுகிறார். மேலும் மாதிரி கட்டிட வடிவமைப்புகள் பலவற்றை பாடங்களாக
கொண்டு அதற்கான தகவல்கள் திரட்டி, வடிவமைப்பு செய்து, தேவையான வரைபடங்கள்
தயாரித்து பயிற்சி பெறுகிறார். இவற்றை தவிர
கட்டிடக்கலை துறை சார்ந்த பல அரிய நூல்களின் மூலம் உலக தரம்வாய்ந்த கட்டிடங்கள், கட்டிடக்கலை
வல்லுநர்கள், படைப்புகள், வடிவாக்கங்கள், நுட்பங்கள், பற்றி அறிந்து தன் அறிவை வளர்த்து
கொள்கிறார். தன் பட்ட படிப்பை முடிக்கும் தறுவாயில் கட்டிடக்கலை துறை சார்ந்த
ஆய்வு ஒன்றை மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கிறார். மேலும் ஒரு பிரசித்திபெற்ற
கட்டிடக்கலை நிறுவனத்தில் சேர்ந்து முறையான தொழில் பயிற்சி பெற்ற பின்னரே கட்டிடக்கலை வல்லுநர் என்கிற பட்டத்தை
பெறுகிறார்.
Comments
Post a Comment